வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 5 பேரூராட்சிகளையும், 54 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. விவசாய நிலங்கள் அதிகமுள்ள தொகுதியாக இருந்தாலும் அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் விவசாயம் முழு அளவில் நடைபெறாத நிலை உள்ளது. வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை அதிக அளவாக அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 3 முறையும், திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளனர். வேடசந்தூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் வி.பி.பி. பரமசிவம் உள்ளார்.வேடசந்தூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,63,262 ஆகும். குடகனாறு நீர் மாசடைந்து விவசாயத்திற்கு மட்டுமன்றி குடிநீருக்காகவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திண்டுக்கல் அருகே குடகனாரில் தோல் கழிவுநீர் மற்றும் நூற்பாலை கழிவுநீர் கலப்பதை இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் உள்ளது பேருந்து நிலையத்தை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் வலியுறுத்துகின்றனர். குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் நூற்பாலை தவிர வேறு தொழில் வாய்ப்பு இல்லாததால் சிப்காட், சிட்கோ தொழிற் பேட்டைகளை உருவாக்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் உள்ளது.