தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக வந்த இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.