விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகின்றனர் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 20 நாட்டு வெடிகுண்டுகள், வெடிமருந்துகளும், அரை கிலோ அலுமினிய பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட விசாரணையில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பதும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டு கடையை சேர்ந்த செல்லக்கிளி(51) என்பவர் வெடிமருந்து, அலுமினிய பவுடர் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வேலுசாமியிடமிருந்து 20 வெடிகுண்டுகள், வெடிமருந்து அலுமினிய பவுடர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வேலுசாமியையும், செல்லக்கிளியும் கைது செய்துள்ளனர்.