தேவகோட்டையில் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் 300 பேர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவிலூரில் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், மக்களின் உயிருக்கு, விவசாயத்திற்கு, குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். மற்ற பகுதிகளில் பேசும்போது, தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தி உங்கள் அனைவரின் மனதிலும் நிற்பேன். இதுவரை நான் பொது வாழ்க்கையில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன். குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன கால்வாய்களை மீட்டெடுத்து சீரமைத்து கொடுப்பேன். அ.தி.மு.க.வில் இருக்கும்போது கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைத்தவன் நான். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் வேண்டுமா அ.தி.மு.க.விற்கு உழைப்பவர்கள் வேண்டுமா என்பதை நண்பர்களே நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தி.மு.க. நண்பர்களே உங்களுடைய கூட்டணி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் காரைக்குடி தொகுதியில் 50 வருடங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. எனவே சிந்தித்து செயல் புரியுங்கள். எவ்வித சமரசத்துக்கும் ஆளாகாமல் தொகுதி மக்களின் உரிமைகளை காப்பதில் செயல்படுவேன். உண்மையான அக்கறையோடு ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண உழைப்பேன். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின் 300 பேர் வேட்பாளர் தேர்போகி பாண்டி முன்னிலையில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் தேவக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதியளித்துள்ளனர்.