‘தகைசால் தமிழர்’ விருதுடன் பரிசாக வழங்கப்பட்ட ₹10 லட்சத்துடன் ரூ.5000ஐ சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு.
2021 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த விருதினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசு வழங்கி கௌரவித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுக்கு சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருதும், பரிசுத்தொகையாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.. அதன்படி இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி பின் விருதுகளை வழங்கினார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதுடன் பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தையும் வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் ‘தகைசால் தமிழர்’ விருதுடன் பரிசாக வழங்கப்பட்ட ₹10 லட்சத்துடன் ₹5000ஐ சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு. இந்த நிதியினை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிபிஐ- ன் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியதாவது, “தகைசால் தமிழர் விருது பெற்றது பெருமைக்குரிய விஷயம், முதலமைச்சர் கொடுத்த ரூ. 10லட்சம் ஆனது எனக்கு தேவைப்படாது, அதனுடன் என்னிடம் இருந்த ரூ.5000- யும் சேர்த்து 10.05 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு அவரது 100ஆவது பிறந்தநாளில் ‘தகைசால் தமிழர்’ விருதுடன் தொகை ரூ.10 லட்சத்தை அளித்தது.. அப்போது அதனை சங்கரய்யாவும் தமிழக அரசின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.