அண்ணனே தன் தங்கையை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டதில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருக்கு நல்லையா என்கிற குட்டி (30) மற்றும் சரஸ்வதி (25) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளான சரஸ்வதி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி அங்குள்ள ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குட்டி சரஸ்வதியை கூப்பிட்டு பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த குட்டி தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது தங்கையை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குட்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
பின்னர் அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது தங்கை சரஸ்வதி செவிலியர் படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்கிறேன் என்று கூறி கவரிங் நகை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டார். மேலும் டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். என்னுடைய பேச்சை கேட்காமல் அடிக்கடி விற்பனை செய்ய போகிறேன் என்று கூறி பலரிடம் போனில் பேசி வந்ததால் நான் கண்டித்ததுடன் விற்பனை செய்ய போக வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவள் கேட்கவில்லை என்பதால் என் தங்கையை வெட்டி கொன்றேன்” என்று கூறியுள்ளார்