வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் செம்பூர் ரோட்டில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் செக்கடிபஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் வேனை மறித்து உள்ளே சென்று பெண்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து வேனில் இருந்த பெண்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர்.
ஆனால் காவல்துறையினரிடம் இருந்து அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் கோபமடைந்த பெண் தொழிலாளர்கள் காவல்துறையினரை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் யார், ஏன் பெண்களை தாக்கினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.