சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் சரக்கு வேனில் வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சரக்கு வேனின் கீழே குழந்தை நின்று கொண்டிருந்ததை பார்க்காத ஓட்டுநர் வியாபாரம் முடிந்து வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் குழந்தை மீது வேன் மோதி தலையில் படுகாயம் ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சரக்கு வேன் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.