கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளே இருந்த நிலையில் மறுசீரமைப்பில் புதிதாக உருவான தொகுதியே வேப்பனஅள்ளி என அழைக்கப்படும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி. ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அதிக அளவிலான வன பகுதியை உள்ளடக்கிய தொகுதி ஆகும். விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்த தொகுதியில் முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகள் மட்டுமே உள்ளன.
எல்லையோர தொகுதி என்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது என நான்கு மொழிகள் பேசும் மக்கள் இங்கு வசிக்கின்றனர். வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி உருவான பிறகு இரு தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக திமுகவின் பி. முருகன் உள்ளார். தொகுதியில் மொத்தம் 2,50,657 வாக்காளர்கள் உள்ளனர்.
விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய நிரந்தர சந்தை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. விளைபொருள்களை சேமிக்க குளிர்பதன கிடங்கு தேவை என்றும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அழியலாம், சுபகிரி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொகுதியில் அரசு கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிமுக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக திமுக எம்எல்ஏ முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தோட்டக்கலை பல்கலைக்கழகம், சிங்கிரி பள்ளி அணைத்திட்டம், சிப்காட் வளாக,ம் மாம்பழக்கூழ் ஏற்றுமதி மையம் ஆகியவை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.