மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வங்கி அதிகாரி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி(57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கே.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வாணி அவரது தங்கை எழிலரசியுடன் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வாணியின் கார் மீது சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதனால் உடல் நசுங்கி வாணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவரும், எழிலரசியும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.