டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு இடத்திற்கு கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.