மர்மமான முறையில் வாலிபர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள சிமென்ட் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், குமார், ரவி ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்குப்பின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மணிகண்டன் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.