பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகே கேத்தி பாரதி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பநாதன் திருமணமான 2 மாதத்தில் வினோதினியை தாய் வீட்டில் விட்டுவிட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரவே இல்லை. தற்போது புஷ்பநாதனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி 2 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வினோதினி ஊட்டி காவல்நிலையத்தில் புஸ்பநாதன் மீது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பல்லடம் காவல்நிலையத்தில் இருந்து வினோதினி மற்றும் அவரது தம்பி குருபிரசாத்துக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு வந்துள்ளது. அதாவது உங்கள் மீது புகார் வந்துள்ளதாகவும், உடனடியாக நீங்கள் பல்லடம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி வினோதினிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக விசாரணைக்கு வர விட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த வினோதினி மற்றும் அவரது தம்பி குருபிரசாத் ஆகியோர் சாணி பவுடரை கலக்கி குடித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் வினோதினி மற்றும் குரு பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.