கேரளா திருவனந்தபுரம் மாவட்டம் வட சேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவருடைய மகள் சங்கீதா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதில் சங்கீதாவும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு(20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தன் காதலி வேறு யாருடனும் பழகுகிறாரா? என்பதை அறிய கோபு ஒரு திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி கோபு சமூகவலைதளத்தில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு (பேக் ஐடி) ஒன்றை உருவாக்கி சங்கீதாவுடன் நட்பாக பேசியுள்ளார். தன் காதலன் தான் அகில் என்ற பெயரில் தன்னுடன் பேசுகிறார் என்பதை அறியாத சங்கீதா தொடர்ந்து பேசிவந்துள்ளார். இதனால் கோபமடைந்த கோபு தன் காதலி சங்கீதா துரோகம் செய்வதாக நினைத்து உள்ளார்.
இந்த நிலையில் உன்னை சந்திக்க இன்றிரவு 1:30 மணிக்கு உங்களது வீட்டிற்கு வருகிறேன் என சங்கீதாவிடம் அகில் போல் பேசியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சங்கீதா நள்ளிரவு 1.30 மணியளவில் தன் வீட்டு வாசலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி கோபு வந்துள்ளான். அப்போது சங்கீதா ஹெல்மெட்டை கழற்றும்படி கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபு தன் காதலி சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றான். இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கீதாவை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். எனினும் சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துயினர் சங்கீதாவின் காதலன் கோபுவை கைது செய்தனர்.