சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஸ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரும் கடந்த 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதன் குமார், ஷாகிதா பானு, செல்வி மற்றும் சந்தியா ஆகிய 4 பேரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
அதேபோல் மகேஸ்வரி என்கின்ற மகா வனிதா விஜயா மற்றும் கார்த்தி ஆகியோர் இடத்தில் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் 4 பேரும் சிறுமிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஸ்வரி (எ) மகா, வனிதா, விஜயா ஆகியோரை கடந்த 16ஆம் தேதி போலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரை தவிர்த்து முத்துப்பாண்டி, அன்சாரி, மீனா, கார்த்திக் முஸ்தபா ஆகியோர் சிறுமியை வற்புறுத்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், வட சென்னை வடக்கு மாவட்ட பா.ஜ.கவின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருபான வண்ணாரப்பேட்டை எம்.சி சாலை ஜெகநாதன் தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தனது அலுவலகத்திலேயே வைத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்தார்.
அதுமட்டுமல்லாது, ராஜேந்திரன் 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை காவல்துறை அதிகாரிக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையே இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போன்று தொடர்ந்து காவல்துறையினர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்வதன் காரணத்தினால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.