டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அமர்வில் விசாரணையானது நடைபெற்றது. புகார் தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் அதனுடைய வழக்கறிஞர் சுரேஷ் வாதங்களை முன் வைத்தார். அவர் தனது வாதத்தில் பொத்தம் பொதுவாக இல்லாமல் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஏராளமான ஆவணங்கள் உள்ளதாக தங்களது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்சஒழிப்புத்துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் உட்பட இதில் சேர்க்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சிறு ஒப்பந்ததாரர்களின் டெண்டர்கள் எவ்வித காரணம் கூறாமல் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிட்டார்.
எஸ்.பி வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி பொன்னி அறிக்கை அளித்ததாகவும், அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து அரசுக்கு அதை அனுப்பியதாகவும், அதனை ஆராய்ந்த தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒளிவு மறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவில் தாம் இடம் பெறவில்லை என வாதிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றைய தினம் முடிவடைந்த நிலையில், அந்த வழக்குகளின் தீர்ப்பு, அதாவது தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.