வேலூர் மாவட்டத்தில் அதிகாலையில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியை சேர்ந்த முனீர் என்பவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பிளாஸ்டிக் கழிவு குடோன் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை பவுடராக மாற்றி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது. தீ காட்டுத் தீ போல் மளமளவென பரவியது.
அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தார்கள். இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். மின் கசிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களும் பொருட்களும் சேதமடைந்துள்ளது.