கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள ஆமைபாக்கம் என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளி ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பிரியங்கா (13), செண்பகவல்லி (11) என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் பிரியங்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
அதன்பிறகு சகோதரிகள் இரண்டு பேரும் மாயமாகி விட்டனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை அருகில் இருந்த கிணற்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மிதப்பதை கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.