தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன் மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதையறிந்த லட்சுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இறந்த லட்சுமிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.