வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்ட்ரூஸ் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 1,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆண்ட்ரூஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.