மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி ரைட்டர் தெருவில் நூறுதீன் என்ற 52 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவியும், அல்தாப் என்ற மகனும் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அவரின் மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மகன் அல்தாப் வேலைக்கு சென்று விட்டார். அதன்பிறகு தனது தாய்க்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார்.
ஆனால் தாய் செல் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டிற்கு விரைந்து சென்றார். அப்போது வீட்டில் தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஹசினா பேகம் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமறைவான ஹசினா பேகம் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், நூறுதீன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி வேலைக்கு செல்லும்போது தனது மனைவியை வீட்டுக்குள் பூட்டி விட்டு, பிறகு வீட்டிற்கு அடிக்கடி வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகன் வேலைக்கு சென்ற பிறகு, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடும் ஆத்திரமடைந்த நூருதீன் தனது மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை பேசி வரவழைத்து கைது செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.