வேலை பார்த்து கொண்டிருக்கும்போது 2வது மாடியில் இருந்து கட்டிடமேஸ்திரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள கோடங்கிபட்டி அருகில் உள்ள தோட்டக்காடு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி இரு தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரது வீடு கட்டுமான பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பெரியசாமி 2வது மாடியிலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எருமப்பட்டி காவல்துறையினர் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.