அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, எல்,பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயங்கவில்லை. இதேப்போன்று ஊட்டியிலும் 2 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயங்கவில்லை. இருப்பினும் சென்னை, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு பேருந்துகள் மூலம் மக்கள் வந்தனர். இந்நிலையில் போதிய அளவிற்கு பேருந்துகள் இயங்காததால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆட்டோ, வேன்கள், கால் டாக்சிகள் போன்றவைகள் வழக்கம்போல் இயங்கியது. இதில் வழக்கத்தைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 2 தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 330 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் போராட்டம் காரணமாக 40 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தபால், வங்கி சேவைகளும் முடங்கியது. இதன் காரணமாக 50 கோடிக்கும் மேல் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.