கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் நெல்லியார் கோணம் குழிவிளை பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சஞ்சய் என்பவர் அறிமுகமானார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அவரது நிறுவனம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டிட வேலையை முடிக்க வேலையாட்கள் காண்டிராக்டை எனக்கு தருவதாகவும், அந்த வேலை முடிந்த பிறகு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டுமான பணியை எனக்கு தருவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் வேலையாட்களை பணியில் அமர்த்தி வேலை கொடுத்து வந்தேன். சுமார் 50 வேலையாட்கள் இணைந்து 5 தளங்களுக்கு 54 ஆயிரம் சதுர அடி வேலையை செய்து முடித்தனர். ஆனால் ஒப்பந்தத்தில் கூறிய முழு தொகையையும் அவர் கொடுக்கவில்லை. மீதமுள்ள பணிகளை 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடித்து கொடுத்து முழுத் தொகையை கேட்டேன். அப்போது 54 லட்சத்து 31 ஆயிரத்து 998 ரூபாயை சஞ்சய் கொடுத்தார். ஒப்பந்தப்படி மீதமுள்ள 29 லட்சத்து 83 ஆயிரத்து 302 ரூபாயை அவர் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே பண மோசடி செய்த சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.