உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 5000 உதவித்தொகை வழங்க உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வந்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: மாநில வேலைவாய்ப்பில் 80% உத்தரகண்டில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். வேலை வாய்ப்புகளைத் தேட இணையதளம் தொடங்கப்படும் என்றும், டெல்லியில் போன்ற இணையதள போர்டல் மூலம் 10 லட்சம் பேர் வேலை பெற்றார்கள் என்று தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சகம் ஒன்று உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.