பெண் அலுவலக உதவியாளர் தன்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் தனது மொபைலுக்கு ஆபாசம் படங்கள் அனுப்புவதாகவும் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ.உ.சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்தில் உதவி அலுவலராக தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.அப்போது அவர் கூறுகையில், “எனது அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் என்னை ஏழு வருடங்களாக பணியை செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருகின்றார்.
சக ஊழியர்கள் என்னுடன் பேசுவதை தடுக்கின்றார். எனது வாட்சப் எண்ணிற்கு ஆபாச படங்கள் வருகின்றது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினேன். உயர் அதிகாரிகளிடம் முருகன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று புகார் அளித்து இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இனி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்”என குற்றம் சாட்டி உள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட பெண் அலுவலக உதவியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்தல் வரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . அதைத்தொடர்ந்து ஜெயா தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.