ஆற்காட்டில் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைந்த அளவில் செயல்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும் மற்றும் மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களும் கலந்து கொண்டார்கள். ஆற்காடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினமும் 84 பஸ்கள் செயல்படும். இந்த போராட்டத்தினால் நேற்று முன்தினம் மட்டும் 35 பேருந்துகள் மட்டுமே இயங்கின. வாரத்தின் முதல் நாள் நேற்று முன்தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊரான ஆற்காட்டிற்கு வந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்கு பஸ் இல்லாததால் பேருந்து நிலையத்தில் அதிக நேரம் காத்திருந்தனர்.
மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயங்கியதால் தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டார்கள். இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் பங்கேற்றதால் வங்கி சேவையும், பண பரிவர்த்தனையும் முடங்கியது. மேலும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தகராறு ஏற்படாமல் தடுக்க ஆற்காடு நகரில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.