மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செல்வம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி என்பவரது வீட்டின் முன்பகுதியில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி செல்வம் மீது பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த செல்வத்தின் உறவினர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது காவல்துறையினர் புகாரை பெற்று கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் நேற்று மாலை வரை காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் செல்வத்தின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனை செய்ய திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.