மண் சரிந்து விழுந்ததால் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகர் முக்கிரந்தால் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழியில் பதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழாய்களை இணைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி(50), சக்திவேல்(40) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பள்ளத்தில் சிக்கி கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதனை அடுத்து தொழிலாளர்களின் உடல்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.