சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள 8 அடி ஆழ பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் மண் சரிந்து விழக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. அப்போது சரோவர் ஷூசைன் என்ற தொழிலாளி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சரோவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.