மின்சாரம் தாக்கியதால் ஒப்பந்த ஊழியர் பலியான நிலையில் மற்றொரு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் புளியம்பட்டி பனங்காட்டூர் பகுதியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் சக்கரவர்த்தி என்று மகன் இருந்துள்ளார். இவரும் விஜய் குமார் என்பவரும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வினோபாஜி நகர் பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் தீபன், விஜயகுமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீபனும், விஜயகுமாரும் உயர் மின்னழுத்த கோபுரங்களில் குறைந்த அழுத்த மின் கம்பிகளை அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்ட தீபன் சக்ரவர்த்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபன் சக்கரவர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.