Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி கடற்கரையில்… உயிரிழப்பைத் தடுக்க வேலி அமைக்கப்படுமா..? சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணியில் அடிக்கடி கடல் அலையில் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வேலி அமைத்து தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா, எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்கா தமிழக சுற்றுலா துறையின் மூலம் திறக்கப்படவில்லை. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆகஸ்ட் 29-ம் தேதி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள். ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களிலும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தவக்காலத்தின் போதும் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வார்கள். அவ்வாறு குளிக்க செல்லும் போது அடிக்கடி கடல் அலையில் சிக்கி உயிர் இழப்பும் ஏற்படுகிறது. அதனை தடுக்க மீனவர்களும் கடலோர காவல் படை போலீசாரும், வேளாங்கண்ணி காவல்துறையினரும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் 13 பேரும், 2020-ஆம் ஆண்டில் 13 பேரும், 2021-ஆம் ஆண்டில் இதுவரை நான்கு பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும் கடலில் மூழ்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. இதனால் வேளாங்கண்ணி கடற்கரையில் 200 மீட்டர் அகலத்திற்கும், 700 மீட்டர் நீளத்திற்கும் தடுப்பு வேலி ஒன்று அமைத்து உயிரிழப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |