தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும் நிலையில் கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்து நாட்களும் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதி இல்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து கொரோனா காரணமாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.