வேளாங்கண்ணி – நாகை இடையேயான மின்சார ரயிலை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.
நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. ஆகையால் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துமாறும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்குமாறும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்ப பிரிவு மூலம் இருமுறை சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்ற 20-ஆம் தேதி தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மேலாளர் உள்ளிட்டோர் தலைமையிலான 50 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவின் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தார்கள்.
தற்பொழுது மின்மயமாக்கல் பணி முடிந்து விட்டதால் மின்சார ரயில் இன்ஜினை கொண்டு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ரயில்வே மின்மயமாக்கல் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தார்கள். தெற்கு ரயில்வே அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் மின்சார ரயிலை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு செய்தார்கள்.