வேளாண்மை வணிகம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ரோஜா பூங்கா அருகே துறை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் சிறப்பு முகம் அமைக்கப்பட்டது. இதற்கு விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஜாய்லைன் சோபியா தலைமையேற்றார். இவர் விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த வேளாண்மை சந்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது குறித்தும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயமாலா கலந்துகொண்டார். இவர் உயிர் உர கட்டுப்பாடு உற்பத்தி, உயிர் உரம், இயற்கை விவசாயம் மற்றும் விற்பனை குறித்து விளக்கமளித்தார். இதைத்தொடர்ந்து வேளாண்மை வணிக செயல்பாடுகளில் வெற்றியடைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்தும் கூறப்பட்டது. மேலும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு, குறு உற்பத்தி, உழவர் நலத்திட்டம், பொருளீட்டு கடன், சேமிப்பு கிடங்குகள், மின்னணு தேசிய வேளாண்மை சந்தை, ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் திட்டம், பழங்கள் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.