புது டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் 2 லட்சம் இயந்திரங்களை வழங்கியும், அவற்றை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. வேளாண் கழிவுகளை எரிப்பது என்பது அரசல் பிரச்சனையல்ல, அதனைத் தடுக்க மாநிலங்கள் செயல்பட வேண்டும். சென்ற 2018-2019ம் வருடம் முதல் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா போன்ற 4 மாநிலங்களுக்கு வேளாண் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு 3 ஆயிரத்து 138 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
அவற்றில், பஞ்சாப் மாநிலத்துக்கு ஆயிரத்து 400 கோடியும், அரியானாவுக்கு ரூபாய்.900 கோடியும், உ.பி.க்கு ரூ.713 கோடியும், டெல்லிக்கு ரூ.6-7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உத்திரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள் நல்ல பணிகளைச் செய்து, சரியான திசையில் பயணிக்கிறது. விவசாய ஆராய்ச்சி அமைப்பான ஐசிஏஆர்-ஆல் உருவாக்கப்பட்ட டிகம்போசர், வேளாண் கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் பயன் உள்ளதாக இருக்கிறது. அத்துடன் இது போன்ற இயந்திரங்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.