பஞ்சாபில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் கிஸான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 14-வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தசரஸில் உள்ள தேவதாஸ் பூரா கிராமத்தில் தண்டவாளத்தின் மீது கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே வரும் 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமரிடமிருந்து தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் ஆனால் அந்த அழைப்பை தாங்கள் அமைப்பு நிராகரித்துவிட்டதாகவும் கிஸார் மஸ்தூர் சங்கரஸ் அமைப்பின் தலைவர் திரு. சர்வன்சிங் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை மத்திய அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.