பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது.
ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வேளாண் சட்டங்களை மோடி ரத்து செய்வதாக அறிவித்தார். விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் தீர்வு கண்டு திருப்தியுடன் இயல்பு வாழ்கை ஈடுபடுவார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பை மீறி சில பா.ஜனதா தலைவர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் நல்லெண்ணம் சூழ்நிலை சீரழிகிறது. எனவே அவர்கள் பேசுவதை பாஜக மேலிடம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.