வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன.
அது மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டவிரோதமானது என்றும் அறிவித்து அந்த வேளாண் சட்டங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் போபண்ணா,ராம சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது.
[விசாரணையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.