மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வெளிநடப்பு செய்ததால் மற்ற கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் தீர்மானம், வெறும் கண்துடைப்பு நாடகம் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் எவரும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்க்காமல் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது, அந்த சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என சாடியுள்ளார்.