குறைவான முதலீட்டில் நிறைவான லாபத்தை பல்வேறு சிறு தொழிலிலும், கிளைத்தொழில்களும் அடங்கிய விவசாயத்தில் சம்பாதிக்க முடியும். இதனால் பலரும் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அதேபோல் குறைந்த இட வசதி, குறைந்த முதலீடு ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்படும் வேளாண் சார்ந்த தொழில்களையும் பட்டியலிட்டுள்ளோம். இதன் மூலம் உங்களின் வேளாண் பொருட்களை உங்கள் சுற்றத்தார்களிடம் சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும்.
வண்ண மீன் வளர்ப்பு (Colour fish farming) :-
தமிழகம் முழுவதும் வண்ண மீன்களை வளர்ப்பதற்கான சீதோஷ்ண நிலை நன்றாக உள்ளது. வண்ண மீன்களில் 1000-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு சென்ட் இடமும், ரூபாய் 25 ஆயிரமும் போதுமானது ஆகும். இது பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்த தொழிலில் குறைந்த உழைப்பு போதுமானது. அதாவது காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என மொத்தம் 4 மணி நேரம் ஒரு நாளைக்கு உழைத்தால் போதும். இதன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் 8 ஆயிரம் மாதம் சம்பாதிக்க முடியும்.
கால்நடை தீவன உற்பத்தி (Livestock feed Business) :-
தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு தொழில் உள்ளது. கால்நடைகள் அதிக பால் சுரப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வலிமைக்கும் பல்வேறு வகையான தீவனங்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு நிறுவனங்களால் கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அந்த பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டவர்கள் தீவன தயாரிப்பு தொழிலில் ஈடுபட முடியும்.
நர்சரி கார்டன் (Nursery Graden Business) :-
இந்த நர்சரி கார்டன் தொழிலை செடி வளர்க்கும் முறையை கற்றுக்கொண்டு நடத்தினால் அதிக லாபம் பார்க்கலாம். ஆண்டு முழுவதும் வருமானத்தை அள்ளி கொடுக்க கூடிய இந்த நர்சரி கார்டன் தொழிலுக்கு பெரிய அளவில் முன் அனுபவம் தேவையில்லை. கொஞ்சம் இட வசதி மட்டும் இந்த தொழிலுக்கு தேவைப்படும். உங்களுக்கு தோட்டம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் இந்த தொழிலில் அதிக லாபம் பார்க்க முடியும்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் (Value added business) :-
பெரும்பாலும் நேரடியாக விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது இல்லை. ஆனால் விவசாயிகள் அதையே மதிப்புக்கூட்டு செய்து விற்றால் அதிக லாபம் ஈட்ட முடியும். விளை பொருட்களுக்கான மதிப்பு கூட்டு தொழிலை சில பயிற்சிகள் மூலமும், குறைந்த முதலீடு மூலமும் தொடங்கி அதில் லாபம் பெற முடியும். உங்கள் பகுதி வேளாண் துறை அதிகாரிகளிடம் இதற்கான ஆலோசனைகளை பெறலாம்.