வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கின்றது.
இதில் மேலாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் ஆரம்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வேலையில்லா வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் சிறந்த கணினி புலமையும் வேளாண் தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனும் இருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை விரிவான செயல் திட்ட அறிக்கையுடன் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் அணுகலாம் என கூறியுள்ளார்.