இந்திய அணிக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. நல்ல பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்தவரை விரைவாக விக்கெட் வீழ்த்திவிட்டு புதுமுக வீரர்களையும், டெய்லண்டர்களையும் ரன்கள் சேர்க்கவிடுவர். ஆனால் கும்ப்ளே இருந்த காலத்தில் டெய்லண்டர்கள் களமிறங்கினால், எந்த கேப்டனாக இருந்தாலும் பந்து நேராக கும்ப்ளேவின் கைகளுக்குதான் செல்லும். அவரின் துல்லியமான யார்க்கர்களை வேகப்பந்துவீச்சாளரால் கூட ஈடுசெய்ய முடியாது.
அதே கும்ப்ளே தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடரை சமன் செய்வதற்காக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். ஆனால் அந்த வரலாறுகளுக்கு பின்னால் இந்திய வீரர்களின் உதவியும் இருந்தது.
1999… இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வாசிம் அக்ரம் தலைமையில் இந்தியா வந்தபோது சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் 261 ரன்களை அடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வியடையும்.
வெற்றியை பெறுவதற்கு நின்று போராடிய சச்சின் 136 ரன்களில் ஆட்டமிழந்தும் அடுத்த 4 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தாரை வார்த்தது. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சச்சின் ட்ரெஸிங் ரூமில் அழுதுகொண்டிருக்க, ஆட்டநாயகன் விருதை சச்சினுக்காக அஸாருதீன் வாங்கிச் சென்றார். பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்த்து பாராட்டி சென்னை மக்கள் சரித்தரப் புகழ்பெற்ற டெஸ்ட் போட்டியாக மாற்றினர்.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்தப் போட்டி இந்திய தலைநகரில் நடைபெற, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் அஸாரூதீன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சடகோபன் ரமேஷ் – விவிஎஸ் லக்ஷ்மண் இணை நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. ஆம், அப்போது லக்ஷ்மண் தொடக்க வீரர். ரமேஷ் 60, கேப்டன் அஸாரூதீன் 67 எடுக்க இந்திய அணி சக்லின் முஷ்டாக் சூழலில் சிக்கிய 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியை கும்ப்ளே – ஹர்பஜன் இணை போட்டிபோட்டு விக்கெட் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு ஆல் அவுட்.
தொடர்ந்து 80 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி சடகோபன் ரமேஷ் 96, கங்குலி 62* ஆகியோரின் உதவியால் 339 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 420 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அப்ரிடி – சயீத் அன்வர் இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்து ஆடியதால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தனர். அப்போது ஜம்போ என ரசிகர்களால் அழைக்கப்படும் கும்ப்ளே பந்துவீச அஸாரூதீன் அழைத்தார். இதற்கு கை மேல் இரட்டை பலன் கிடைத்தது. அப்ரிடி 41 ரன்களிலும், இஜாஸ் அஹ்மத் 0 ஆட்டமிழக்க 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கும்ப்ளே ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
அதையடுத்து தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் கும்ப்ளே பந்துவீச அழைக்கப்பட பாகிஸ்தான் வீரர்களுக்கு கொஞ்சம் ஆட்டம் கொடுத்தது. 28ஆவது ஒவரின்போது கும்ப்ளேவின் சுழலில் இம்சமாம் முதலில் சிக்க, அதே ஓவரில் முகமது யூசுப் பலியானார். பின்னர் நிதானமாக ஆடிய சயீத் அன்வர் – மொயின் கான் இணையை, அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்த பாகிஸ்தான் அனி 128 ரன்களுக்குள்: 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளை நேரம் வர, இந்திய அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அதிசயமும் அந்தப் போட்டியில் நடந்தது. ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஒரே ஒருவர் தான். அவரும் இங்கிலாந்து அணியின் ஜிம் லேக்கர். அவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோக்கள் கூட இணையத்தில் இல்லாததால், வரலாற்று நிகழ்வை முதன்முதலாக இந்திய ரசிகர்களின் கண் முன் காட்டுவதற்கு கேமராக்களும், இந்திய அணியும் தயாரானது. ஆனால் அந்த சாதனையைப் படைக்கப்போகும் கும்ப்ளேவோ, தனது சிறந்த பந்துவீச்சான 6 விக்கெட்டுகளை 7 விக்கெட்டுகளாக மாற்ற வேண்டும் என நினைத்திருந்தார்.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. சமீம் மாலிக் – வாசிம் அக்ரம் இணை இந்திய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. ஆனால் டெய்லண்டர்களால் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியவில்லை. சலீம் மாலிக்கை 15 ரன்களில் கும்ப்ளே போல்ட் எடுக்க, அதனைத் தொடர்ந்து வீசிய 58ஆவது ஓவரில் முஷ்டாக் அஹமத், சக்லின் முஷ்டாக் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி 9 விக்கெட்டுகளை கும்ப்ளே கைப்பற்றினார்.
இந்திய அணியின் வெற்றிபெற ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ளது. இறுதி விக்கெட்டைக் கைப்பற்றினால் கும்ப்ளே சரித்திர சாதனைப் படைப்பார். இந்திய பந்துவீச்சாளரான ஸ்ரீநாத் இறுதி விக்கெட்டை எடுத்துவிடக் கூடாது என பேட்ஸ்மேன்களுக்கு வொய்டாக வீசி அந்த ஓவரை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் ஸ்ரீநாத் பந்தில் வந்த கேட்ச்சை சடகோபன் ரமேஷ் பிடிக்க வேண்டாம் என ஸ்ரீநாத்தே அறிவுறுத்துவார்.
இதற்கிடையே கும்ப்ளே 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றக் கூடாது என வாக்கர் யூனிஸ் ரன் அவுட் ஆகலாம் என்று வாசிம் அக்ரமிடம் கூற, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பண்போடு வாசிம் அக்ரம் அதனைத் தவிர்த்தார்.
61ஆவது ஓவரை வீசுவதற்கு மீண்டும் கும்ப்ளே வர, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அக்ரம் கும்ப்ளேவின் சுழலில் சிக்கி வீழ்ந்தார். ஒரே இன்னிங்ஸில் அனைத்து வீரர்களையும் வீழ்த்தி இந்திய அணியின் பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர் ‘ஜம்போ’ என அழைக்கப்படும் அனில் கும்ப்ளே சரித்திர சாதனைப் படைத்தார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றாதால் இந்திய அணி 1-1 என்ற தொடரை சமன் செய்தது. இந்திய அணியின் கும்ப்ளே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போதைய கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அத்தனை சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும். எதிரணியின் கிண்டல், கேலி, கோபம் என பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் கனவத்தை திசைதிருப்ப முயன்றுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பவுண்டரியும் பந்துவீச்சாளரின் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும். ஆனால் கும்ப்ளே 26.3 ஓவர்களை வீசி 74 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது எளிதான விஷயமல்ல. இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் கடந்தும், இந்திய ரசிகர்கள் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய நாளின் நினைவுகளை கொண்டாடி வருகின்றனர்.
சச்சினின் ரசிகர்களாலும், சச்சினின் வளர்ச்சியாலும் இந்திய அணியின் சில வீரர்கள் அதிகம் கொண்டாடப்படாமல் உள்ளனர். அதில் கும்ப்ளேவின் பெயர் முதன்மையானது. இந்தியாவுக்காக யோசித்து யோசித்து பந்துவீசிய கால்கள், தற்போது இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்லாது உலகக் கிரிக்கெட்டையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல ஓடிக்கொண்டிருக்கிறது.
10 wickets in an Inning. What a game it was. We went for movie and I remember going out just to listen to score on radio and getting update as there were no mobiles or internet. #AnilKumble deserves much more respect than he's getting today. 🙏https://t.co/qL1txstfpz
— CS Jigar Shah (@FCSJigarShah) February 7, 2020