ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. இதை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் அஞ்சலி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது .