மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் சென்ற 10ஆம் தேதி அப்தாப் அமீனை கைது செய்தனர். இப்போது நீதிமன்றக் காவலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஷாரத்தாவை கொலை செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட வழக்குக்கு தேவையான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
அத்துடன் அப்தாப் பொய் கூறுகிறாரா என்பதை கண்டறியும் “பாலிகிராப்” சோதனை சென்ற சில நாட்களுக்கு அவருக்கு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நார்கோ சோதனை நடத்த முடிவுசெய்யப்பட்டது. அந்த வகையில் இன்று காலை நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பல உண்மைகள் வெளிவரும் என காவல்துறையினர் நம்புகின்றனர். இந்நிலையில் அப்தாப்பிற்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையானது நிறைவு பெற்றதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.