கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு தான் மீண்டும் மின் விநியோகமானது சப்ளை செய்யப்படும்.
அதன் பிறகு 3 மாதங்கள் வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் முற்றிலுமாக மின் வினியோகம் துண்டிக்கப்படும். இவர்களுக்கு மின் விநியோக நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும். ஒருவேளை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் மின்சார இணைப்பை பெறுவதற்கு மின் நுகர்வோர் மீண்டும் முதலில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். மீண்டும் முறைப்படி விண்ணப்பித்தால் தான் மின் வினியோகம் வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் மின்கட்டணம் செலுத்தாத மின் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.