ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா மோசமான சாதனையை படைத்துள்ளார்..
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய இந்திய அணியின் ரோஹித் பந்து வீச முடிவு செய்தார்..இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.. இருப்பினும் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடியதால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது இந்திய அணி.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையையும் தட்டி தூக்கியது..
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். ஆம், 28 வயதான அவர் தனது 4 ஓவர்களில் 12.50 எக்கனாமியில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. முன்னதாக ஆகஸ்ட் 27, 2016 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 விக்கெட் எடுத்து 47 ரன்கள் விட்டுக்கொடுத்ததே டி20ஐ கிரிக்கெட்டில் அவரது முந்தைய மோசமான சாதனையாக இருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடியதன் மூலம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் பும்ரா.. உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான இவர், டெத் அவர்களிலும் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பவுலராக இருக்கிறார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பவுலராக திகழும் பும்ரா நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் வாரி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலககோப்பைக்கு முன்னதாக பும்ராவின் ஓவரில் ரன்கள் கசிவது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா நல்ல யார்க்கர் வீசி ஆரோன் பிஞ்சை விக்கெட் எடுத்திருப்பார்.. இந்த வீடியோ கூட வைரலானது.. ஆனாலும் அந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்திருப்பார்… நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகி இருந்த பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டு வந்து பங்கேற்றுள்ளார். தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவுடன் 3 டி20 தொடரில் மோதவுள்ளதால் நிச்சயமாக அந்த தொடரில், பும்ரா தனது பார்மை மீட்டுக் கொண்டு வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா கொடுத்த அதிக ரன்கள் :
2022 செப்டம்பர் 25 : 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
2016 ஆகஸ்ட் 27 : 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் – 2 விக்கெட் (வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக)
2020 ஜனவரி 29 : 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் (நியூசிலாந்துக்கு எதிராக)
2016 ஜனவரி 31 : 4 ஓவர்கள் வீசி 43 ரன்கள் – 1 விக்கெட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
2016 மார்ச் 31 : 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் – 1 விக்கெட் (வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக)
2018 பிப்ரவரி 24 : 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் – 1 விக்கெட் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக)