தாஜ்மஹாலிலுள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் போன்றோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வந்திருக்கிறது. இம்முறை தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க இயலும். அதாவது, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் சுற்றுலாப்பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் உர்ஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதியானது வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் கூறியதாவது, பிப்ரவரி 27 ஞாயிற்றுக்கிழமை ஷாஜகான் உர்ஸின் முதல் நாள். அப்போது மதியம் 2 மணி முதல் மாலை வரையிலும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கலாம். இதையடுத்து பிப்ரவரி 28 திங்கட்கிழமை, உர்ஸின் மரபுகள் மதியம் 2 மணிக்குப் பின் துவங்கும். அதில் இருந்து மாலை வரை ஒருவர் இலவசமாக நுழையலாம்.
மார்ச் 1ம் தேதி உர்ஸின் கடைசி நாளான செவ்வாய்கிழமை, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இலவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் அசல் கல்லறைகளை பார்க்க அனுமதி வழங்கப்படும். உர்ஸின்போது கொரோனா நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும். பெரிய டிரம்ஸ், டாஷ்கள், விளம்பரப்பொருட்கள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் அசல் கல்லறைகளை அனைவரும் பார்க்கலாம்.