சென்னை தி நகரில் மட்டும் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள், வார்டு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க அவர்களின் கேள்விக்கு மேற்பிரியா பதில் அளித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து தி நகரில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது தி நகரில் பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு காருக்கு ரூபாய் 40, மோட்டார் சைக்கிளுக்கு ரூபாய் 10 வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது காருக்கு கட்டணம் ரூபாய் 20 உயர்த்தப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 60 ஆகவும், மோட்டார்சைக்கிள் கட்டணம் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 15 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
சென்னையை பொருத்தவரை 83 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தி நகரை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எப்போதும் போல் பழைய கட்டணமே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.