குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது.
மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் ஆணையர் ஹபிபுல்லா மற்றும் இரண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் நியமித்த சமரசகுழு கடந்த 3 நாட்களாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் கள ஆய்வை நடத்தி அறிக்கை சமபித்தது.
இந்நிலையில் ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஷாஹீன்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் தேவையில்லாத அம்சங்களை பற்றி விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்தது. பொது சாலைகளில் காலவரையின்றி போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய மனு மீதான விசாரணை மார்ச் 23ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லியில் அமைதி திரும்பிய பிறகே ஷாஹீன்பாக் வழக்கை விசாரிக்க முடியும் என நீதிபதி கூறியுள்ளார்.